1991 ஆம் ஆண்டு இந்தியாவில் தேர்தல் அறிவிப்பு
பங்களாதேஷில் புயல் பாதிப்பு – இந்த சூழலில் எழுதப்பட்டது.
அமைதியாய் இருந்தது பூமி
அதிர்ச்சியாய் ஓர் அறிவிப்பு!
இன்னும் இருபத்தி நான்கு மணி நேரத்தில்
புயல் தேர்தல் பூமிக்கு வரலாம்.’
வரண்டபூமி வாய் பிளந்தது.
‘வந்தேன்’ – இடி கட்டியம் கூறியது.
ஆளும் கட்சியின் அதிகார வேட்பாளராக-மேகம்.
ஏட்டிக்குப் போட்டி எதிர்க்கட்சி வேட்பாளராக-காற்று.
புறப்பட்டது மேகம் புடை சூழ பூமிக்கு
புது மழை பொழிய
கனமழை (பணமழை) பார்த்திருந்த பூமிக்கு
புழுதி வேட்பாளனின் புதியகட்டளை
‘பணநாயகம் பெற்று
ஜனநாயகம் கொல்லாதீர்!’
காற்றால் கலைக்கப்பட்ட மேகம்
கபோதிகளின் சதி என
கடகடவென புலம்பியோட
காற்றின் கை ஓங்கியது.
காற்றுக்கு பதில் சொல்ல
கருமேகம் களத்தில் மீண்டும்
மழை பணம் பொழிய
மகிழ்ந்திருந்த பூமி
அளவுக்கு மீறியதால் அவதியுறலாகியது.
‘காணாமல் போனோர் அறிக்கை ஒன்று
கடும் மழையின் கனத்தால்
கம்மாய்களும், கால்வாய்களும்,
கட்டிடங்களும் காணவில்லை
கண்டால் உன் பெயர்
கல்வெட்டில் பொறிக்கடும்.’
சக வேட்பாளனின் சாதனை சகிக்காமல்
போட்டி வேட்பாளன் பொறாமையில் புரட்சி செய்ய
புள்ளினங்கள் கூட புதைந்து போயின.
புதிய ஜனநாயகம் படைக்க புறப்பட்ட
புயல் தேர்தல் பூமியில் முடிய
புண்கள் மட்டும் ஆறவில்லை.
இடிந்த வீடுகளும், இறந்தோர் எண்ணிக்கைகளும்
கண்ணிமைக்கும் நேரத்தில்
கனவேகமாய் உயர
கணினி தேவைப்பட்டது கணக்கிட.
இன்னல்பட்டோருக்கு இயந்திரபடகும்,
வறுமையுற்றோருக்கு வானவூர்தியும்
உணவும் உதவியும் வழங்க
இயற்கையோ!
இடி முழக்கமிட்டு
இன்னுமொரு (மறு) தேர்தல் என்றது.
– ஒரு இந்தியப் பிரஜை